Sunday 28th of April 2024 11:26:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீா்மானத்தை  நிறைவேற்றுவதில் உறுப்பு நாடுகள் உறுதி!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீா்மானத்தை நிறைவேற்றுவதில் உறுப்பு நாடுகள் உறுதி!


பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடா்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கொண்டுவந்த தீா்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகியது ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிப்பதாக கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மீண்டும் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இந்த நாடுகளின் இலங்கை தொடர்பான பிரதான குழுக்களின் சாா்பில் மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர் ரீட்டா பிரென்ஞ் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 44 அமர்வில் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

பேரவையில் 44 வது அமர்வில் வடமாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோவுடன் இணைந்து உரையாற்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் எந்தவொரு பொறுப்புக்கூறல் பொறிமுறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கை கோவிட்-19 வைரஸ் தொற்று நோயுடன் போராடி வருகிறது. தொற்று நோயாளா்களின் எண்ணிக்கையை அந்த நாடு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

எனினும் பேரவை உயர் ஸ்தானிகர் கூறியது போல், தொற்றுநோயைக் கையாளுகிறோம் என்ற போா்வையில் மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என உறுப்பு நாடுகளின் முதன்மைக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

சிறுபான்மையினரைக் குறிவைத்து ஓரங்கட்டுவது, அப்பாவி மக்களின் படுகொலை தொடா்பில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளி சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்காவை பொது மன்னிப்பில் விடுதலை செய்தமை, மோதலின் போது கடுமையான போா்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்குப் பதவி உயர்வு வழங்கியமை, சிவில் சமூக செயற்பாடுகள் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றமை குறித்த இலங்கை மனித உரிமை அமைப்புகளின் கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

நாட்டின் ஜனநாயக செயற்பாடுகள் திறந்த மற்றும் பொறுப்புடன் இருப்பதை உறுதி செய்ய இலங்கைக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

கைது செய்யப்படுதல், தடுத்து வைத்தல் ஆகிய நடவடிக்கைகளின்போது சா்வதேச விதிமுறைகள் மற்றும் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைச் சரத்துக்கள் பேணப்பட வேண்டும் என நாங்கள் இலங்கையை வலியுறுத்துகிறோம் எனவும் வடமாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோவுடன் இணைந்து கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் முதன்மைக் குழுக்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 44ஆவது அமா்வில் வலியுறுத்தியுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE